இதோ… ஸ்மார்ட் போன் பிடியில் இருந்து உங்களை விடுவித்துக் கொள்ள செம டிப்ஸ்…

ஸ்மார்ட் போன்.. உலகெங்கும் உள்ள மக்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் கையில் குடியிருக்கும் தகவல் தொழில்நுட்ப சாதனம். ஸ்மார்ட்போன் பலருக்கும் பல்வேறு வகைகளில் உதவியாக இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் நாளடைவில் பயன்பாட்டுக்காக ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வந்த நிலை மாறி இன்று பலரும் ஸ்மார்ட் போனிற்கு அடிமையாக மாறி வருகிறார்கள்.

ஸ்மார்ட் போன் உங்களை முழுமையாக ஆக்கிரமித்து விட்டதா? மொபைலுக்கு நீங்கள் அடிமையாகி விட்டீர்கள் என்பதற்கான அறிகுறிகள் மற்றும் ஆபத்துக்கள்…

ஒரு செல்போன் பயன்பாட்டாளர் ஒரு நாளைக்கு சராசரியாக 2,617 முறை தன்னுடைய ஸ்மார்ட் போன் திரையை தொடுகிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. தொடர் ஸ்மார்ட் போன் பயன்பாட்டால் மன அழுத்தம், தூக்கத்தில் பாதிப்பு, பார்வைத்திறன் குறைபாடு என பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இதனால் ஸ்மார்ட் போன் பிடியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற முயற்சி செய்ய வேண்டும் என்று நினைத்தால் இந்த டிப்ஸ்களை பின்பற்றி பாருங்கள்.

1. வாரத்திற்கு ஒரு நாள் தேர்ந்தெடுத்து அந்த நாள் முழுவதும் உங்கள் ஸ்மார்ட் போனை தொடக்கூடாது என்று உறுதியோடு இருங்கள். சனி அல்லது ஞாயிறு ஆகிய நாட்களில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அந்த நாள் முழுவதும் குடும்பத்தோடு செலவிடுவது அல்லது உங்களுக்கான நேரம் செலவிடுவது ஆகியவற்றில் ஈடுபட்டு உங்கள் ஃபோனை மறந்து இருங்கள்.

2. நேர கட்டுப்பாடு செட்டிங்கை ஆன் செய்து வைத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு நேரம் உங்களது ஸ்மார்ட் போனை பயன்படுத்த வேண்டும் என்பதற்கான கால நிர்ணயத்தை முடிவு செய்து வைத்து பயன்படுத்துங்கள்.

3. உங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் போடும் பொழுது படுக்கைக்கு அருகிலோ அல்லது கைக்கு எட்டும் தூரத்திலோ சார்ஜ் போடாமல் உங்களை விட சற்று தொலைவில் சார்ஜ் போட்டுக்கொள்வது சிறந்தது.

4. நீங்கள் வீட்டிற்குளோ அல்லது படுக்கை அறைக்குள்ளோ கதவை திறந்து நுழையும் பொழுதே உங்கள் ஸ்மார்ட் போனை ஓரிடத்தில் வைத்து விட்டு நுழையுங்கள். முக்கிய அழைப்புகளைத் தவிர வேறு எதற்காகவும் தேவையின்றி எடுக்க வேண்டாம்.

ஸ்மார்ட் போன்

5. நோட்டிபிகேஷன்களை அணைத்து வைத்து விடுங்கள். உங்கள் கவனத்தைச் சிதறடிக்கும் ஆப்களை ஹோம் ஸ்கிரீனில் வைக்க வேண்டாம். ஏரோபிளேன் மோட் அல்லது டூ னாட் டிஸ்டர்ப் மோட் ஆகியவற்றை பயன்படுத்துங்கள்.

6. வீட்டில் இருக்கும் பொழுது உங்கள் அலைபேசியை சுற்றி ஒரு ஹேர் பேண்ட் போட்டு விடுங்கள். நீங்கள் ஒவ்வொரு முறை உங்கள் போன் எடுக்கும் பொழுதும் அந்த ஹேர் பேண்ட் பார்க்கையில் அவசியம் இப்பொழுது இந்த நேரத்தை ஸ்மார்ட்போனில் செலவிட வேண்டுமா என்று சிந்தித்து அதன் பிறகு பயன்படுத்துங்கள்.

Leave a comment