ஒரு குழந்தை பிறந்ததில் இருந்து அதற்கு ஆறு மாதம் வரும் வரை தாய்ப்பால் மட்டுமே உணவாக கொடுக்க வேண்டும். ஆறு மாதத்திற்கு பிறகு வேறு உணவுகள் கொடுக்க தொடங்கினாலும் தாய்ப்பாலை இரண்டு வயது வரை கொடுக்கலாம். தாய்ப்பாலில் தான் குழந்தைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றது. குழந்தைக்கு ஆறு மாதம் வரை தாய்ப்பால் தவிர வேறு ஆகாரமோ, தண்ணீரோ கொடுக்கக் கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.
மேலும் தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு எளிதில் செரிமானமும் ஆகிறது. தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு ஏராளமான நன்மைகள் உண்டு என்பது பலரும் அறிந்ததுதான். ஆனால் தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தை மட்டும் இல்லாமல் தாயும் சேர்ந்து பல நன்மைகளை பெறுகிறார். வாருங்கள் தாய்ப்பால் கொடுப்பதால் தாய்மார்களுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்பதை பார்க்கலாம்.
தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கு ஏற்படும் நன்மைகள்:
1. தாய்ப்பால் கொடுக்கும் பொழுது தாய் குழந்தையை உடலோடு அணைத்து கொடுப்பதாலும், குழந்தை கண்களை பார்த்தபடி பால் புகட்டுவதாலும் தாய்க்கும் சேய்க்கும் இடையில் இணக்கம் அதிகரிக்கும். இது குழந்தையின் சமூக வளர்ச்சி நிலையில் முக்கிய படியாக அமையும்.
2. கர்ப்ப காலத்தில் பல பெண்களுக்கும் உடல் எடை அதிகரிக்கும். பிரசவத்திற்கு பிறகு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் உடலில் அதிகமாக இருக்கும் கலோரிகள் எரிக்கப்படுகின்றது. இதனால் உடல் எடையை வெகுவாக குறைத்திட வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
3. தாய்ப்பால் புகட்டும் பொழுது ஆக்சிடோஸின் எனும் ஹார்மோன் உற்பத்தி ஆகிறது. இந்த ஹார்மோன் உற்பத்தியால் கர்ப்ப காலத்தின் பொழுது விரிவடைந்த கர்ப்பப்பை மீண்டும் பழைய நிலைக்கு அடைய உதவி புரிகிறது.
4. ஒரு வருடம் முதல் இரண்டு வருடம் வரை தாய்ப்பால் புகட்டும், தாய்மார்களுக்கு கர்ப்பவாய் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து குறைவாகவே இருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள்.
5. பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் மன அழுத்தம், உயர் இரத்த அழுத்தம், ரத்தத்தில் உள்ள கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவு ஆகியவற்றை வெகுவாக கட்டுப்படுத்த உதவி புரிகிறது.
தாய்ப்பால் புகட்டுவதால் ஏற்படும் நன்மைகளை உணர்ந்து சத்துள்ள ஆகாரங்களை சாப்பிட்டு குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும் பயணத்தை அழகாக்குங்கள்.
1 thought on “என்ன..? தாய்ப்பால் கொடுப்பதால் தாய்மாருக்கு இத்தனை நன்மைகளா?”