காரசாரமான பெப்பர் சிக்கன் இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்…!

பெப்பர் சிக்கன் சுவையான காரசாரமான ஒரு ரெசிபியாகும். வார இறுதி நாட்கள் வந்து விட்டாலே கண்டிப்பாக ஏதாவது ஒரு அசைவ உணவு இருந்தால் தான் அந்த வாரமே நிறைவடைந்தது போல இருக்கும். அப்படி வார இறுதி நாட்களில் எளிமையாக அதே சமயம் சுவையாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால் இந்த பெப்பர் சிக்கனை முயற்சி செய்து பார்க்கலாம்.

இந்த பெப்பர் சிக்கன் மிக மிக எளிமையான ரெசிபியாகும் இதை செய்வதற்கு அதிக பொருட்கள் தேவையில்லை. வீட்டில் உள்ள குறைவான பொருட்களை வைத்து எளிமையாக செய்யலாம். வறுத்து அரைக்க வேண்டிய மசாலாக்கள் என்று எதுவும் இல்லை. மிக எளிமையான ரெசிபியாக இருந்தாலும் இதன் சுவை அத்தனை அட்டகாசமாக இருக்கும் வாருங்கள் இந்த பெப்பர் சிக்கன் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

பெப்பர் சிக்கன் செய்வதற்கு முதலில் அரை கிலோ அளவு சிக்கனை நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு பெரிய வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். சின்ன வெங்காயமாக இருந்தால் ஒரு கப் அளவு வெங்காயத்தை பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு மேசைக் கரண்டி அளவு இருக்கும் படி இஞ்சி மற்றும் பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

சூப்பரான குளு குளு இளநீர் பாயாசம் இப்படி செய்து பாருங்கள்..!

இப்பொழுது ஒரு கடாயில் மூன்று மேசைக் கரண்டி அளவிற்கு எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் சூடானதும் 1 துண்டு பட்டை, 3 கிராம்பு, 3 காய்ந்த மிளகாய் ஆகியவற்றை கடாயில் சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி மற்றும் பூண்டை சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும். இரண்டும் பச்சை வாசனை போகும் அளவிற்கு வதக்கவும்.

இப்பொழுது நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து அதை பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். இதற்கான மசாலா செய்வதற்கு இரண்டு மேசை கரண்டி மிளகு, ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு ஸ்பூன் சீரகம் ஆகியவற்றை சேர்த்து இடித்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் வதங்கும் பொழுதே மூன்று பச்சை மிளகாய் மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு இடித்து வைத்திருக்கும் மசாலா தூள் சேர்த்து கலந்து விட வேண்டும். இதுதான் பெப்பர் சிக்கன் செய்வதற்கு தேவையான முக்கியமான மசாலா. இப்பொழுது நாம் ஏற்கனவே சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கனை சேர்த்து சிக்கன் வெந்து வரும் வரை கிளறி விட வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். தண்ணீர் தேவைப்பட்டால் லேசாக தெளித்துக் கொள்ளலாம்.

சிக்கன் நன்றாக வெந்து வந்த பிறகு இதனை கொத்தமல்லி தழை தூவி பரிமாறலாம். புளிப்பு சுவை பிடிக்கும் என்றால் லேசாக எலுமிச்சை சாறு பிழிந்து பரிமாறலாம். இது ரசம் சாதம், தயிர் சாதம் ஆகியவற்றுடனும் அட்டகாசமாக இருக்கும். அவ்வளவுதான் அருமையான பெப்பர் சிக்கன் தயார்.

Leave a comment