இந்த சித்திரை 1 அன்று சுவையான இந்த செட்டிநாட்டு ஸ்பெஷல் உக்கரா செய்து அசத்துங்கள்…!

சித்திரை திருநாள் தமிழகத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். இந்த சித்திரை திருநாள் அன்று பலரும் பல விதமான இனிப்புகளை செய்து இறைவனுக்கு படைத்து வழிபடுவர். பொங்கல், பாயாசம், கேசரி போன்று இல்லாமல் வித்தியாசமாக இந்த சித்திரை திருநாளுக்கு உக்கரா செய்து பாருங்கள். இந்த உக்கரா செட்டிநாட்டு பகுதியில் பிரசித்தி பெற்ற ஒரு இனிப்பு வகை ஆகும். வாருங்கள் இதை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

இந்த உக்கரா பாசிப்பருப்பை பயன்படுத்தி செய்யும் ஒரு இனிப்பு வகையாகும். உக்கரா செய்வதற்கு ஒரு கப் அளவு பாசிப்பருப்பை எடுத்துக்கொள்ள வேண்டும் இதனை வேகவைத்துக் கொள்ள வேண்டும். அதிகமாக குழைத்து விடாமல் பதமாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் மூன்று மேசை கரண்டி அளவிற்கு தேங்காய் துருவலை சேர்த்து குறைவான தீயில் வைத்து வறுத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது அதே கடாயில் கால் கப் அளவு பச்சரிசி மாவை சேர்த்து அதையும் குறைவான தீயில் வறுத்து தனியே வைத்துக் கொள்ளவும். இப்பொழுது கடாயில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். நெய் சூடானதும் முக்கால் கப் அளவிற்கு ரவையை சேர்த்து வறுக்க வேண்டும். ரவை நன்கு சிவந்து வாசம் வரும் வரை வறுக்க வேண்டும்.

ரவையை வறுக்கும் பொழுதே ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீரை சுடவைத்து கொள்ள வேண்டும். தண்ணீர் சூடானதும் வறுபட்ட ரவையில் ஊற்றி கட்டிகள் ஏதும் இல்லாமல் கிளறி விட வேண்டும். ரவையை தண்ணீரில் நன்றாக கிளறியதும் ஏற்கனவே வேக வைத்திருக்கும் பாசிப்பருப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நானூறு கிராம் அளவு வெல்லத்தை பாகாக காய்ச்சிக் கொள்ளவும். இதில் கம்பி பதம் ஏதும் வரவேண்டிய அவசியம் இல்லை. இந்த வெல்லப்பாகை வடிகட்டி ரவையுடன் சேர்த்து கிளற வேண்டும். இப்பொழுது அனைத்தையும் நன்றாக கிளற வேண்டும். அனைத்தும் சேர்ந்து இறுகி வரும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாக நெய் விட வேண்டும்.

இப்பொழுது நாம் ஏற்கனவே வறுத்து வைத்திருக்கும் பச்சரிசி மாவை தூவி கிளறி விட வேண்டும். அனைத்தும் நன்றாக கிளறி கெட்டியானதும் நாம் வறுத்து வைத்திருக்கும் தேங்காய் துருவல் சேர்த்துக் கொள்ள வேண்டும். இறுதியாக நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கி விடலாம். அவ்வளவுதான் அட்டகாசமான உக்கரா தயாராகி விட்டது.

1 thought on “இந்த சித்திரை 1 அன்று சுவையான இந்த செட்டிநாட்டு ஸ்பெஷல் உக்கரா செய்து அசத்துங்கள்…!”

Leave a comment