சாம்பார் தென்னிந்தியாவின் பிரபலமான ஒரு உணவு வகை என்று சொல்லலாம். வெங்காய சாம்பார், முருங்கைக்காய் சாம்பார், முள்ளங்கி சாம்பார், வெண்டைக்காய் சாம்பார் என சாம்பாரில் பல வகை உண்டு. இது இல்லாமல் இட்லி சாம்பார், பாசிப்பருப்பு சாம்பார் இப்படி சாம்பார் வகைகளை வைத்தே ஒரு கட்டுரை எழுதி விடலாம். அத்தனை வகையான சாம்பாருக்கும் அருமையான ஒரே சாம்பார் பொடி இருந்தால் எப்படி இருக்கும்.
பெரும்பாலும் சாம்பார் பொடியை கடைகளில் தான் வாங்கி பயன்படுத்தி இருப்போம். சாம்பார் பொடி பயன்படுத்தி செய்யும் சாம்பார் கூடுதல் மணமாகவும், சுவையாகவும் இருப்பதாக உணர்ந்திருப்போம். ஆனால் இந்த சாம்பார் பொடியை கடையில் வாங்காமல் நீங்களே வீட்டில் தயாரித்து பயன்படுத்தி பாருங்கள் அதன் பிறகு உங்கள் சாம்பாரின் சுவையும் மணமும் இரட்டிப்பாகும். வாருங்கள் இந்த சாம்பார் பொடி எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
சாம்பார் பொடி தயாரிக்க ஒரு கிலோ அளவு நீளமான வர மிளகாய் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மிளகாயின் மேல் உள்ள காம்பை நீக்கி சுத்தம் செய்து வெயிலில் காய வைக்க வேண்டும். இதனுடன் ஒரு கிலோ மல்லி, ஒன்றரை ஆழாக்கு துவரம் பருப்பு, ஒன்றரை ஆழாக்கு கடலைப்பருப்பு, ஒன்றரை ஆளாக்கு பச்சரிசி, அரை ஆளாக்கு உளுந்து ஆகியவற்றை சேர்த்து காய வைக்க வேண்டும்.
இவை மட்டுமின்றி இரண்டு மேசை கரண்டி வெந்தயம், இரண்டு மேசை கரண்டி மிளகு, இரண்டு மேசை கரண்டி சீரகம், ஒரு மேசை கரண்டி சோம்பு, 100 கிராம் அளவிற்கு விரலி மஞ்சள், 50 கிராம் கட்டி பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக காய வைக்க வேண்டும். நல்ல வெயில் படும் இடத்தில் காய வைத்த பிறகு இவற்றை மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளலாம்.
அரைத்த இந்த சாம்பார் பொடியை நன்கு சலித்து காற்று புகாதவாறு டப்பாவில் வைத்து மூடி வைத்துக் கொள்ளலாம். இதனை அனைத்து வகையான சாம்பார் மற்றும் குழம்பு வகைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதன் பிறகு நீங்களே பாருங்கள் உங்கள் சமையலின் சுவை இரட்டிப்பாகி இருப்பதை.