மனிதனுக்கு பொதுவாக ஏற்படக்கூடிய ஒரு உணர்வு தான் கோபம். மகிழ்ச்சி, அழுகை, சோகம் போன்று கோபமும் ஒரு சாதாரண உணர்வு தான். பெரியவர்களை போலவே குழந்தைகளும் இந்த உணர்வுகளை சிறு வயதிலிருந்து வெளிப்படுத்த தொடங்குவார்கள். குழந்தைகள் மகிழ்ச்சியின் போது எப்படி சிரிப்பது இயல்போ அதேபோல தங்களுக்கு ஒன்று கிடைக்கவில்லை அல்லது பிடிக்கவில்லை என்றால் அதை கோபமாக வெளிப்படுத்துவது இயல்புதான்.
ஆனால் இந்த கோபம் அளவுக்கு அதிகமாக வெளிப்படுகிறது என்றால் நாம் சற்று அதை கவனிக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக அடம் பிடித்தல், கைகளில் கிடைக்கும் பொருட்களை தூக்கி போடுதல், கேட்ட பொருள் கிடைக்கும் வரை நிறுத்தாமல் அழுது கொண்டே இருத்தல் போன்ற விஷயங்கள் குழந்தையிடம் அதிகம் காணப்பட்டால் அதை எப்படி கையாள்வது என்ற குழப்பம் பெற்றோர்களுக்கு ஏற்படலாம்.
இந்த மாதிரியான தருணங்களை தான் பெற்றோர்கள் மிக கவனமாக கையாள வேண்டும். காரணம் நீங்கள் கையாளும் முறையில் தான் குழந்தையின் இந்த பழக்கமானது மாறுதல் அடையுமா? அல்லது நாள் போக்கில் இன்னும் அதிகமாகுமா? என்பது அடங்கி இருக்கிறது. எனவே உங்கள் குழந்தை கோபப்பட்டால் நீங்கள் பதிலுக்கு உணர்ச்சி வசப்படாமல் அதை கையாளுங்கள்.
குழந்தையின் கோபத்தை குறைக்க கையாள வேண்டிய வழிமுறைகள்:
- குழந்தை கோபம் கொண்டு கத்தும் பொழுது நீங்கள் பதிலுக்கு கோபம் கொண்டு அவர்களை திட்டுதல், அடித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுதல் கூடாது. இது அந்தக் குழந்தையின் கோபம் குணத்தை இன்னும் அதிகமாக்கும்.
- குழந்தை எந்த விஷயத்திற்காக அடம் பிடிக்கிறதோ அதிலிருந்து அதன் கவனத்தை வேறு விஷயத்திற்கு திருப்பப் பாருங்கள். குழந்தைக்கு பிடித்தமான செயல்களிலோ அல்லது பொம்மைகளையோ காட்டி அவர்கள் கவனத்தை திருப்ப பாருங்கள்.
- குழந்தை பிடிவாதம் பிடித்து கத்தும் பொழுது அவர்களை அமைதி படுத்த முயற்சி செய்யுங்கள். எந்த சூழலிலும் உங்கள் பொறுமையை இழந்து விடக்கூடாது.
- பெரும்பாலும் தனிமை, விரக்தி ஆகியவற்றை உணரும் குழந்தை தான் இதுபோன்று நடக்கக்கூடும். எனவே உங்கள் குழந்தையுடன் அதிக நேரத்தை செலவிடுங்கள். உங்களின் கவனத்தை அதிக நேரம் அவர்கள் மேல் தக்க வைப்பதற்காக கூட அவர்கள் அவ்வாறு நடந்து கொள்ளலாம்.
- குழந்தைகளிடம் அவ்வப்போது எந்த சூழலில் எப்படி கையாள வேண்டும். எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அன்பாக அவர்களுக்கு புரியும்படி எடுத்துரையுங்கள்.