சித்ரா பௌர்ணமி அன்று கலவை சாதத்தில் ஒன்றாக இந்த தேங்காய் சாதம் செய்து அசத்துங்கள்…!

சித்ரா பௌர்ணமி இன்று பலரும் கலவை சாதங்கள் செய்து இறைவனுக்கு படைத்து இறைவழிபாடு நடத்துவது வழக்கம். சர்க்கரை பொங்கல், புளியோதரை, தக்காளி சாதம், எலுமிச்சை சாதம் தேங்காய் சாதம் என வகை வகையாய் கலவை சாதங்கள் செய்து பிரசாதமாக படைப்பது வழக்கம். இந்த சித்ரா பௌர்ணமிக்கு இவ்வாறு வித்தியாசமான தேங்காய் சாதம் முயற்சித்துப் பாருங்கள்.

இந்த தேங்காய் சாதத்தை குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதிகமாக காரம் பிடிக்காதவர்களுக்கு ஏற்ற கலவை சாதம் இந்த தேங்காய் சாதம் ஆகும். வாருங்கள் எளிமையாக அதே சமயம் சுவையான தேங்காய் சாதம் எவ்வாறு செய்யலாம் என்பதை நாம் இப்பொழுது பார்க்கலாம்.

தேங்காய் சாதம் செய்வதற்கு முதலில் ஒரு கப் அளவு பொன்னி பச்சரிசியை எடுத்துக் கொள்ளவும் இதை தண்ணீரில் நன்றாக அலசிக்கொள்ள வேண்டும் இப்பொழுது இந்த பச்சரிசியை சாதமாக வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். சாதம் குழைந்து விடாமல் உதிரியாக வருமாறு பதமாக வடித்து எடுக்கவும்.

ஒரு பெரிய தேங்காயை துருவி பூ எடுத்துக் கொள்ளவும். இந்த தேங்காய் துருவலை ஒரு கடாயில் போட்டு ஈரம் இல்லாமல் ஈரம் இல்லாமல் வறுக்க வேண்டும். அடுப்பை குறைவான தீயில் வைத்து வறுக்க வேண்டும். அதிகம் சிவக்க விடாமல் லேசாக ஈரம் போக வறுத்தால் போதும்.

இப்பொழுது ஒரு கடாயில் நான்கு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். தேங்காய் எண்ணெய் காய்ந்ததும் அதில் சிறிதளவு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, நான்கு வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

இவற்றுடன் சிறிதளவு கறிவேப்பிலை சேர்க்கவும். நீங்கள் விருப்பப்பட்டால் முந்திரி அல்லது வேர்கடலை சேர்த்துக் கொள்ளலாம். அது கூடுதல் சுவையாக இருக்கும். அனைத்தையும் தாளித்த பிறகு நாம் வறுத்து வைத்திருக்கும் தேங்காய் பூவை கொட்டி கிளறி விட வேண்டும்.

தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். இப்பொழுது தாளித்தவற்றை வடித்த சாதத்தில் கொட்டி கிளறவும். சாதத்தை நன்றாக கிளறிய பிறகு ஒரு பாத்திரத்தில் எடுத்து இதனை மூடி வைத்துவிடலாம். சிறிது நேரம் மூடி வைத்து பிறகு பரிமாறலாம். பொரித்த அப்பளத்துடன் சாப்பிட இந்த தேங்காய் சாதம் சுவையாக இருக்கும்.

Leave a comment