கர்ப்ப காலத்தில் உண்டாகும் இடுப்பு வலி பிரச்சனைக்கு 6 அருமையான தீர்வுகள்…!

பெண்கள் தங்களின் கர்ப்ப காலத்தில் பல்வேறு விதமான உடல் உபாதைகளை சந்திக்க நேரிடுகிறது. அதில் முக்கியமான ஒன்றுதான் இடுப்பு வலி. கர்ப்ப காலத்தில் பொழுது பல்வேறு பெண்களுக்கும் இடுப்பு பகுதியில் கடுமையான வலி தோன்றலாம். சரியாக உட்கார, நடக்க முடியாத அளவிற்கு இந்த இடுப்பு வலி தொந்தரவு செய்யலாம். உங்களுக்கும் இதுபோல இடுப்பு வலி பிரச்சனை இருந்தால் கவலை வேண்டாம் இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள்.. நிச்சயம் உங்கள் இடுப்பு வலியை ஓரளவு குறைக்க முடியும்.

1. குழந்தை வளர வளர வயிற்றுப் பகுதியில் எடை அதிகரிக்கும். இதனால் கொஞ்சம் கொஞ்சமாக கர்ப்பிணிப் பெண்களின் உடல் தோரணை மாற்றம் அடைகிறது. அவர்களை அறியாமலேயே பின்னோக்கி வளைந்து நடக்க ஆரம்பிப்பார்கள். இதனால் இடுப்பு பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு வலி உண்டாகலாம்.

என்ன..‌? தாய்ப்பால் கொடுப்பதால் தாய்மாருக்கு இத்தனை நன்மைகளா?

எனவே கூடுமானவரை நிமிர்ந்து நடக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் தோள் பகுதிகளை சற்று தளர்வாக பின்நோக்கி வைத்துக் கொள்ளுங்கள். உட்காரும் பொழுது முதுகுக்கு ஆதரவு அளிக்கக்கூடிய வகையில் நாற்காலியை பயன்படுத்துங்கள். இல்லையேல் ஒரு தலையணையை முதுகு பகுதியில் வைத்து இலகுவாக அமருங்கள்.

2. நீங்கள் அணியும் காலணிகளுக்கும் உங்கள் இடுப்பு வலிக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம் மென்மையான தட்டையான காலணிகளை கர்ப்ப காலத்தில் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. கர்ப்ப காலத்திற்கென்றே பிரத்தியேகமாக காலணிகள் வடிவமைக்கப்பட்டு சந்தைகளில் விற்கப்படுகின்றன. அதுபோன்ற காலணிகளை பயன்படுத்துங்கள். இவ்வாறு சரியான காலணிகளை தேர்வு செய்து பயன்படுத்தினால் இடுப்பு வலி ஏற்படுவதை குறைக்க முடியும்.

3. கர்ப்பிணி பெண்கள் கீழே இருக்கும் ஏதேனும் பொருளை எடுக்க வேண்டும் என்றால் அடிக்கடி குனிந்து நிமிர்ந்து எடுப்பதை தவிர்த்துக் கொள்ளுதல் நல்லது. உட்கார்ந்து எடுக்க பழகிக் கொள்ளுங்கள். இது உடலுக்கு உடற்பயிற்சியாக அமைவதோடு இடுப்புப் பகுதியில் ஏற்படும் வலியையும் ஏற்படாத வண்ணம் தடுக்கும்.

4. உறங்கும் பொழுது சரியான நிலையில் உறங்குகிறீர்களா என்பதை கருத்தில் கொள்ளுங்கள். கர்ப்பகாலத்தில் ஒரு கணித்து படுப்பதே சிறந்தது. ஒருக்கணித்து படுத்து உங்கள் கால்களுக்கு இடையில் மென்மையான தலையணைகளை வைத்துக் கொள்ளுங்கள். முதுகு புறத்திலும் தலையணை வைத்து இலகுவாக உறங்குங்கள்.

5. மருத்துவரின் அறிவுரையோடு இடுப்பு பகுதியில் மசாஜ் தேவைப்பட்டால் செய்து கொள்ளலாம். சூடான அல்லது குளிர்ச்சியான மசாஜ் வலியை பெரும் அளவு குறைக்க வல்லது. ஆனால் முன் அனுபவம் இல்லாதவரை துணையாய் கொண்டு இந்த மசாஜை செய்ய வேண்டாம். கூடுமானவரை அனுபவம் பெற்ற நபர் அல்லது மருத்துவர் துணையோடு மசாஜ் செய்து கொள்ளுங்கள்.

6. எப்பொழுதும் ஒரே நிலையில் படுத்தோ அல்லது அமர்ந்தோ இல்லாமல் சிறு சிறு உடல் இயக்கம் தரும் செயல்களில் ஈடுபடுங்கள். காலார நடப்பது போன்ற எளிய உடற்பயிற்சிகள் செய்து கொள்ளுங்கள். ஆனால் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் கடுமையான உடற்பயிற்சி எதுவும் செய்யக்கூடாது.

Leave a comment